சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 25) மழையானது பரவலாகப் பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் சில இடங்களில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இது குறித்து சில வாகன ஓட்டிகள் கூறுகையில், "சென்னை தான் தமிழ்நாட்டின் மிக முக்கியமான நகரமாக விளங்குகிறது. இங்கு தான் அனைத்துவகையான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் எல்லாம் சென்னையில் முக்கியமான சாலைகளில் அமைந்திருக்கின்றன. தினமும் வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வோர், என ஏராளமானோர் செல்வதால் வழக்கமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 'தற்போது மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மின்சாரக் கேபிள்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு நாட்கள் மழையானது பரவலாக பெய்து வருவதால் நிறைய இடங்கள் சேறும், சகதியாக மாறி உள்ளன. இதனால் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது எனவும் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் இன்று சற்று அதிகமாக காணப்படுகின்றது' என்றனர். மேலும், இதற்கு மாற்று வழிக் கொண்டு வரவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் சென்னை பெருநகரப் போக்குவரத்து நெரிசலை கையாளுதல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நியூ ஆவடி சாலை, 100-அடி சாலை, கோயம்பேடு, அம்பத்தூர், சேத்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆருத்ரா மோசடி: இதுவரை 22 பேர் கைது - பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தகவல்!