சென்னை: தமிழகத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 1லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 12 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஏமாற்றிய தனியார் நிறுவனம் சுமார் 427 முதலீட்டாளர்களிடமிருந்து 6.5கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளது.
பணத்தை இழந்த பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது 7.5லட்சம் பணம், 80லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கில் இருந்த 3.5 லட்சம் ரூபாய் பணங்களை முடக்கம் செய்தனர்.
இவ்வழக்கில் நிறுவனத்தின் இயக்குனர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆரோன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. வழக்கு பதிவான நிலையில் இருவரும் தொடர்ச்சியாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருவதால் அவர்களை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து இழந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த தனியார் நிறுவனத்தின் இயக்குனர்களை கைது செய்து பணத்தை திருப்பி பெற்று தர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட புஷ்பலதா, “கடன் பிரச்சனையில் இருந்த போது இந்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் 1லட்ச ரூபாய்க்கு மாதந்தோறும் மூன்றாயிரம் தருவதாக ஆசை வார்ததை கூறினர். ஆருத்ரா போல் மோசடி செய்யமாட்டோம் உலகிலேயே முதல் நிறுவனமாக கொண்டு வரும் முயற்சியில் தாங்கள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இதனை நம்பி திருமணத்திற்கு போட்ட நகையை விற்று 5லட்ச ரூபாய் முதலீடு செய்தேன். சில மாதங்கள் வட்டி சரியாக வந்ததால் என் கணவர், பழக்கமானோர் என சுமார் 20லட்ச ரூபாய் நிறுவனத்தில் முதலீடு செய்தோம். அதன் பிறகு திடீரென கடையை மூடிவிட்டு சென்றதால் பல முறை தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்கவில்லை.
என்னை நம்பி பணத்தை முதலீடு செய்தோர் எனது கழுத்தை பிடிக்கின்றனர். இவர்களால் பணக்காரங்க இன்னும் பணக்காரங்களாகவும், ஏழைங்க இன்னும் பாதாளத்தில் போறான்ங்க” என பணத்தை இழந்தது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான கலா பேசியதாவது, “கடந்த பிப்ரவரி மாதம் இந்த நிறுவனத்தின் முகவர் 1லட்ச ரூபாய் முதலீடு செய்தால் வாரந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதை நம்பி 8லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தேன்.
அதன் பின்னர் கடையை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். உடனடியாக பணத்தை மீட்டு தரவேண்டும்” என அவர் காவல் துறையிடம் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து, தீர்வு காணும் நோக்கில் அவர்களை புகார் கொடுக்க பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி சற்று நேரத்திற்கு பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பித்தராத நண்பர்கள்: கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய், மகன் தற்கொலை!