சென்னை: சென்னைக்கான காலநிலை மாற்றம் எதிரான வரைவு செயல் திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மீதான கருத்துகளை செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், மாநகராட்சி இணையதளத்தில் உள்ள காலநிலை வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது. தமிழில் இல்லாததால் இதுகுறித்து பல சாமானிய மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய இயலவில்லை எனத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிபிஐஎம், பாமக, பூவுலகின் நண்பர்கள் போன்ற பல்வேறு கட்சிகளும், சூழலியல் இயக்கங்களும் காலநிலை செயல் திட்டத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இன்னும் ஒருநாள் மட்டுமே மிச்சமுள்ள நிலையில், தற்போது வரை காலநிலை செயல்திட்டம் தமிழில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்றாவது தமிழில் பதிவேற்றம் செய்யப்படுமா என பொதுமக்களும் அமைப்புகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறனர்.
காலநிலை மாற்றம் செயல்திட்டம் தொடர்பான கருத்துகளை பொதுமக்கள் chennaiclimateactionplan@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தங்களின் கருத்துகளைத்தெரிவிக்கலாம்.
இதையும் படிங்க: பணியாளர் தேர்வு ஆணையம்: டிகிரி படித்தவர்களுக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்