திருநின்றவூர் அடுத்துள்ள நத்தமேடு ஊராட்சிக்குள்பட்ட பாலாஜி நகர், ராகவேந்திரா நகரில் 1000-க்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனர். கடந்த சில வாரங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் சூழ்ந்து தீவுபோல் காட்சியளிக்கிறது.
மழைநீருடன் சேர்ந்து பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்புகளுக்குள் வரும் விஷப் பூச்சிகள் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அச்சுறுத்தலாக உள்ள பாம்பு போன்ற விஷத்தன்மை கொண்ட பூச்சிகளை உடனடியாக குடியிருப்புகளிருந்து அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒவ்வொரு மழைக் காலங்களிலும் இப்படித்தான் ஆகிறது, அலுவலர்கள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. வீட்டைச் சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கியிருப்பதால் பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டெங்கு போன்ற நோய்த் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.