சென்னை: கானத்தூர் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் தீபா ரவிக்குமார். இவர் நன்மங்கலத்தில் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். அப்போது, குழந்தைகளை டியூசன் சென்டரில் வந்து விடும் பெற்றோர்களிடம் குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவிற்காக கல்வித்திட்டம் என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் சீட்டு செலுத்தும் படி கூறி பலபேரிடம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் கல்வித்திட்ட சீட்டில் சேராத பெற்றோர்களிடம் தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டில் சேர்த்து 30-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 1 கோடிய 46 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீபா ரவிக்குமார், ஜூலை 24ஆம் தேதி வேளச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்ததைக் கண்ட பாதிக்கப்பட்டவர்கள், தீபாவை பிடித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார்
இது சீட்டு மோசடி விவகாரம் என்பதால் இந்த வழக்கை சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு தீபாவை அனுப்பி வைப்பதாக பள்ளிக்கரணை காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து, கிண்டியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுவுடன் குவிந்தனர்.
அவர்களிடம் காவல் துறையினர், பேச்சுவார்த்தை நடத்தியதில், தீபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தாங்கள் ஏலச்சீட்டு கட்டி ஏமார்ந்த பணத்தை திருப்பி பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதனைக் கேட்ட காவல் துறையினர், பள்ளிக்கரணை காவல் துறையினர், தங்களிடம் யாரையும் ஒப்படைக்கவில்லை என்றும் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!