கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று (மே 10) முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்கும் திட்டத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (மே 10) முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தாம்பரம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மக்கள் ஸ்மார்ட் கார்டு வாங்குவதற்கு விண்ணப்பித்தவர்கள் இன்று காலையில் இருந்து தற்போதுவரை 200க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று ஸ்மார்ட் கார்டினைப் பெற்று வருகின்றனர்.
காலையிலிருந்து தற்போது வரை நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதால் அலுவலர்கள் 2 அல்லது 3 கவுன்ட்டர்கள் தொடங்கி விரைவாக ஸ்மார்ட் கார்டினை வழங்க வேண்டுமென என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும், ஸ்மார்ட் கார்டு வாங்குவதற்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடியதால் அங்கு கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் காவல் துறையினர், பொதுமக்களை தகுந்த இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைத்தனர்.