சென்னை: கலைவாணர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று (டிச.3) ‘உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - 2022’ விழா நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள் (ஊதா அங்காடி), ஓவியங்கள் மற்றும் நவீன உதவி உபகரணங்கள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான மாநில விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி வழங்கி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நாஸ்காம் (NASSCOM), காக்னிசன்ட் (COGNIZANT) ஆகிய நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய மென்பொருள் திறன் பயிற்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழா கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000இல் இருந்து, ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டு, வருகிற ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகளும் கடற்கரையை காண மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை... விரைவில் அனைத்து கடற்கரையிலும் அமைக்கப்படும்... அமைச்சர் உறுதி...