இந்தியாவில் அடிப்படை உரிமைகளைப் பெறவும், அரசு, அரசு சாராத அமைப்புகள் மீதான தங்களது சந்தேகங்களைக் களையவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நெடுநாட்களாக மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.
தற்போது மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. ஆயினும், மாநிலங்களவையில் அதிமுகவின் 13 உறுப்பினர்கள் மத்திய அரசு முன்னெடுக்கும் திருத்தங்களைத் தொடர்ந்து ஆதரித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.