கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருக்கலாம் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று சீன ராணுவ வீரர்கள் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் உயிரிழப்பு அதிகரித்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டு அரசியல் கட்சிகள் பலரும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. இது போன்று வாய் திறக்காத பிரதமரோ, குடியரசுத் தலைவரோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா? இந்தியப் படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய - சீன மோதல் : ஒரு பார்வை