சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடந்த விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "உங்களை (எம்எல்ஏக்ளை) விட எங்களுக்கு (அமைச்சர்களுக்கு) குறைவா தான் சம்பளம் வருது. அதையும் கும்பாபிசேகத்துக்கு நிதி குடுன்னு மஞ்சப்பையோட வந்து காலையிலே வாங்கிட்டு போயிடறாங்க" என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும், ஒன்றிய தலைவர்களுக்கு கார் வழங்கப்படுவதை போன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் எனவும் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "சட்டமன்ற உறுப்பினர்களை காட்டிலும், அமைச்சர்களுக்கு மாத ஊதியம் குறைவாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினார். அமைச்சர்களுக்கு மாதம் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 1.5 லட்சம் மாத ஊதியம் வழங்கப்படுவதால் அமைச்சர்களை காட்டிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் பரவாயில்லை என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவதற்கே தங்களது மாத ஊதியம் செலவாகி விடுவதாக தெரிவித்த துரைமுருகன், காலை எழுந்தால் மஞ்சள் பையுடன் வந்து கும்பாபிஷேகத்திற்கு 25 ஆயிரம் கொடு, பத்தாயிரம் எழுது என்று வாங்கிச் சென்று விடுவதாக நகைச்சுவையுடன் பதிலளித்தார்.