சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது புதியதாக மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து 10 கி.மீ., தூரத்திற்குள் உள்ள இடத்தில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. ஆனால், புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் பயணிகளுக்குப் பேருந்து நிழற்குடைகள் அமைத்துத் தரப்படாமல் உள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் இருந்து சிறுவங்கூர் பஞ்சாயத்திற்குட்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாலையும் போதுமானதாக இல்லை. அதேபோல் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் பேருந்துதிற்கு காத்திருக்கும்போது கடும் வெயில், மழையிலும் அவதிப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பல்வேறுப் பகுதியில் இருந்து வரும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக சங்கராபுரம் கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள மாமாந்தூர் கூட்டு சாலையில் காத்திருக்க வேண்டியதுள்ளது. அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் காத்திருக்கவும் இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே தங்குவதற்கு நிழற்குடையும் அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் கீர்த்தி வர்மன் கூறும்போது, “திண்டுக்கல் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை தினந்தோறும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் நோயாளியுடன் வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உபயோகப்படுத்துகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில் புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், வெளி மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கரூர், ஈரோடு, சேலம் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்படும். இப்பேருந்து நிறுத்தம் முக்கியமான சந்திப்பாக உள்ளது.
அதேபோல எதிர் திசையில் திண்டுக்கல் நகரத்துக்கு உள்ளே நுழையும் எதிர் நிறுத்தத்திலும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் நின்று செல்கிறது. பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கான போதுமான நிழற்குடை வசதி இல்லை. ஏற்கனவே பழைய பேருந்து நிழற்குடை அவ்வளவு பயணிகளுக்கானதாகவும், பயன்படுத்தும் சூழ்நிலையும் இல்லை.
திண்டுக்கல் மாநாகராட்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையும் இணைந்து மாணவர்கள், பயணிகள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி நவீன வசதியுடன் கூடிய புதிய நிழற்குடைகள் அமைத்து தர வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்திற்கு ஏர்போர்ட் கார்பன் அங்கீகார தரச்சான்றிதழ்!