கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் டிஜி வைஷ்ணவா கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, மீனாட்சி கல்லூரி, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் என பல்வேறு இடங்களில் சாதாரண அறிகுறி உள்ளவர்கள் தங்க வைப்பதற்கான தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மாத்திரைகளை மாநகராட்சி அதிகாரிகள் வழங்குவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சையும் உணவும் அளிக்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
சென்னை லயோலா கல்லூரி தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்டோருக்கான உணவை மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு வந்து மொத்தமாக வைத்து விட்டு சென்று விடுகின்றனர். மேலும் தேவையான அளவு தண்ணீரும் அளிப்பதில்லை. அதுமட்டுமின்றி எந்தவித சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெறவில்லை என சிகிச்சை பெற்று வருபவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குடும்பத்தைப் பிரிந்திருப்பது ஒரு புறம் என்றால், மறுபுறம் அரசு சரியாக தங்களை கவனிக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.