சென்னை: குவைத்து செல்லும் ஜெசீரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (ஜூலை 16) அதிகாலை 2:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் பயணிப்பதற்காக 174 பயணிகள் நேற்று இரவு 11:30 மணிக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்து அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு பயணம் செய்வதற்குத் தயார் நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் விமானம் வழக்கமாக குவைத்தில் இருந்து அதிகாலை 1:15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு மீண்டும் 2:05 மணிக்கு குவைத்துக்கு புறப்பட்டுச் செல்லும். அதைப்போல் விமானம் குறிப்பிட்ட நேரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. ஆனால், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்ததையடுத்து சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது
பின்னர், விமானம் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்தின் இயந்திரக் கோளாறு சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு மேல் புறப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு கால நீடிப்பு செய்து பகல் 12 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 19ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு!
ஆனால், விமானம் இது வரையில் புறப்படவில்லை எனவும்; பழுது பார்க்கும் பணியும் இன்னும் முடிவடையவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் பயணிக்க வேண்டிய 174 பயணிகளும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் எந்த வித உறுதியான அறிவிப்புமின்றி தவித்துவந்தனர்.
12 மணி நேர காத்திருப்பு: பயணிகள் நேற்று (ஜூலை 15) இரவு 11:30 மணிக்கு வந்து விட்டதால் 12 மணி நேரத்துக்கு மேலாக பயணிகள் விமானத்தில் ஏறாமல் காத்திருக்கின்றனர். பயணிகளுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதிகளை விமான நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பயணிகள் குடிநீர், உணவு இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து பயணிகள் விமான நிலையத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
பயணிகளுக்கு ஹோட்டல்கள் ஏற்பாடு: இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது, ''விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் இந்த விமானம் குவைத் நாட்டைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு சென்னை விமான நிலையத்தில் தனிப்பட்ட முறையில் அலுவலகம் எதுவும் இல்லை.
எனவே, பணிகள் சற்று தாமதம் ஆகிறது. இந்த நிலையில் விமானம் மேலும் தாமதமானால் விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகளை சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யும் படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதோடு பயணிகளுக்கு உணவு, குடிநீர் போன்றவைகள் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் இது தனியார் விமான நிறுவனம் என்பதால் அவர்கள் தான் அதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்'' என்றும் பதிலளித்தனர்.
சுமார் 174 பயணிகள் 12 மணி நேரமாகியும் விமான நிலையத்தில் இருக்கும் இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இருளில் படிக்க முடியாமல் தவித்த மாணவனுக்கு சோலார் பேனல் வழங்கிய தலைமை ஆசிரியர்!