சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து அந்தமானுக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணம் செய்ய அந்தமானைச் சேர்ந்த அபிஷேக் சைனே (27) என்பவர் வந்துள்ளார். போர்ட்டிங் பாஸ் வாங்க வந்த அவர், திடீரென இத்தாலியிலிருந்து சென்னை வந்துள்ளேன்.
எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கா என்பதை கண்டறிய வேண்டும் என்று கூறி இருமியுள்ளார். இதனால், பதற்றம் அடைந்த விமான நிலைய அலுவலர்கள் உடனடியாக பன்னாட்டு முனையத்தில் உள்ள மருத்துவக் குழுவினரை வரவழைத்தனர்.
பின்னர், அவர்கள் சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனால், தனக்கு முழு உடல் சோதனையும் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு மருத்துவக் குழுவினர், கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை, முழு உடல் பரிசோதனையை தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்தமான மருத்துவமனையில் எடுத்து கொள்ளவும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இத்தாலியில் கணினி பொறியாளராக பணியாற்றுகிறேன். கடந்த 4ஆம் தேதி இத்தாலியில் இருந்து டெல்லி வந்தேன். டெல்லியில் இருந்து சென்னை வந்து தங்கியிருந்தேன். சொந்த ஊருக்குச் செல்லும் தனக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று சோதனை நடத்தப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மருத்துவக் குழு கூறுகையில், “ உங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எதுவுமில்லை. அந்தமான் செல்ல வேண்டிய விமானமும் புறப்பட்டுச் சென்றுவிட்டது. நீங்கள் முழு சோதனையும் செய்துவிட்டு வாருங்கள். இல்லை என்றால் வேறு விமானத்தில் செல்லலாம்" என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பீதி - 16 சர்வதேச விமானங்கள் ரத்து!