சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக 2012ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி, தையல், இசை, ஒவியம் போன்ற எட்டு பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தினர். ஆனால், அவர்களுக்கு தொகுப்பூதியத்தில் மட்டுமே உயர்வு வழங்கப்பட்டது; பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பாக, பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து மாநிலத் தலைவர் சேசுராஜா மற்றும் பகுதிநேர ஆசிரியர் கண்மணி ஆகியோர் கூறும்போது, “12 கல்வியாண்டுகளாக அரசு, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 16 ஆயிரத்து 459 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில், மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்தும் வகையில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம்.
12 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்ய, அரசிடம் பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தினோம். தொடர் கோரிக்கைகளும் போராட்டாங்களும் நடத்தப்பட்ட போதும், பணிநிரந்தரம் செய்யவில்லை. அதனால் எங்களின் வாழ்வாதாரத்தை இழந்தும், சமுதாயத்தில் மதிப்பிழந்த போதிலும் மாணவர்களின் நலன் கருதி பணியாற்றி வருகிறோம்.
திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பி.எப் (PF), இ.எஸ்.ஐ (ESI) போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் அவை எதுவும் இதுவரையில் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
பள்ளிக்குச் சென்றால் நாங்கள் அமர்வதற்குக்கூட இடம் இல்லாத நிலை தான் உள்ளது. ஒருவரை, அவர் வாங்கும் சம்பளத்தை வைத்து தான் மதிக்கின்றனர். எங்களுக்கு வாரத்தில் மூன்றரை நாள்களுக்குத்தான் வேலை நாள்களாக அறிவிக்கின்றனர். எனவே இந்தமுறை பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிடும் வரையில் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று (செப்.25) காலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், இன்னும் பல்வேறு ஆசிரியர் இயக்கங்களை அழைத்துப் பேச வேண்டியதுயுள்ளது என தெரிவித்தார்.
மேலும், இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகையில், "எங்களது தரப்பில் ஏற்கனவே 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகி ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், முதலமைச்சர் அறிவித்த இந்த கோரிக்கையை இன்னும் காலதாமதப்படுத்துவதை ஏற்க முடியாது. திட்டமிட்டே காலதாமதம் ஏற்படுத்துவதாக தெரிகிறது. அதனால், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்களது ஒற்றைக் கோரிக்கையான "சம வேலைக்கு, சம ஊதியம்" என்ற அரசாணையை பிறப்பித்தால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும். போராட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தோடு, செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடியும், கோரிக்கை நிறைவேறாததால் இம்முறை அரசாணையின்றி போராட்டத்தை கைவிடுவதில்லை" என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "தலைமை ஆசிரியரே பள்ளிக்கு லேட்டா வரலாமா"- தாமதமாக வந்த தலைமை ஆசிரியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய மேயர்!