பள்ளிகள் மீண்டும் திறந்த பின் அனைத்து நாள்களிலும் பள்ளிக்கு வர பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடைநிலைக் கல்வி திட்டத்தின் மாநில இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் “தமிழ்நாட்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுப் பரவலால் கடந்த இரண்டு மாத காலமாக பள்ளிகள் செயல்படாததன் காரணமாக இவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அதே சமயம் இவர்களுக்கு மே மாதம் சம்பளமும் வழங்கப்படவில்லை.
பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணிபுரிந்தால் போதுமென ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக இந்த மாதம் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே பள்ளிகள் திறக்கும்போது அவர்கள் பணிபுரியும் நாள்களுக்கு மாற்றாக அனைத்து நாள்களும் பணிபுரிய வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கரோனா சூழலை மனதில் கொண்டும் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் ஜூன் மாதம் முதல் அவர்களுக்குரிய சம்பளம் வழங்கப்படும் எனவும், பள்ளிகள் திறந்த உடன் அவர்கள் வேலை செய்யாத நாள்களை ஈடுகட்டும் வகையில் அனைத்து நாள்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க : கோவையில் விதிகளை மீறிய கடைகள் மூடல்!