சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை(ஏப்ரல் 19) பள்ளி மேலாண்மைக்குழுவை தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலர்களுடன் வந்து இன்று (ஏப்ரல் 18) ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஒவ்வொரு அரசு பள்ளியும் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் குழந்தைகள் பள்ளிக்கு வருவது மட்டுமல்லாமல், பள்ளியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் பங்குகொள்ள வேண்டும். இதற்காக பெற்றோர்கள் ஆசிரியர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். பெற்றோர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கான போதிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதற்காக 23 லட்சம் பெற்றோர்களுடன் கருத்துக்கேட்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
நீதி போதனை வகுப்புகள்: பொதுத்தேர்வுக்கு அரசு தயார் நிலையில் உள்ளது. மாணவர்கள் தைரியமாக, பதற்றமில்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவேண்டும். தேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து மாணவர்கள் தங்களது தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் குழந்தைகள் மீது தங்களது ஆசையை திணிக்க கூடாது. அவர்கள் என்னவாக வேண்டுமோ அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை உள்ளது. பெற்றோர் குழந்தைகளது திறமையை கண்டறிந்து, அதனை ஊக்குவிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இந்தாண்டு முதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதனால் இந்த வகுப்புகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அரசு இதற்கான முக்கியத்துவம் வழங்கும்.
இந்தியில் போலி சான்றிதழ்கள்: அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு ஊதியம் வழங்க ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 2 ஆயிரத்து 969 பேர் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை விரிவுபடுத்தும் பணியை அரசு மேற்கொள்ளும். போலி சான்றிதழ் வழங்குவதாக புகார்கள் தொடர்ந்து வருவதால், சான்றிதழ் சரிபார்க்க கோரினால் சரிபார்க்கப்பட்டு, போலியானது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போலி சான்றிதழ்களில் இந்தியை முதன்மை மொழியாக போட்டு அளித்துள்ளனர்.
ஓராண்டில் மட்டும் 6.26 லட்சம் மாணவர்கள் 37ஆயிரம் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஆசிரியர்கள் தேவை ஏற்படும் பள்ளிகளில் தேவைக்கேற்றால் போல் பணியமர்த்தப்படுவார்கள். முதற்கட்டமாக 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். பின்னர் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் உறுதி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ் வழியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எத்தனை பேர்? - விவரம் உள்ளே..!