சென்னை: கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பர் மாதம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் பெற்றோரிடம் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெற்றோர் கலந்துகொள்ளவில்லை என்றும், பங்கேற்ற ஒரு சில பெற்றோரும் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்துத் தெரிவித்ததாக, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால், பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோரிடம் நேற்றும் (ஜனவரி 6), இன்றும் (ஜனவரி 7) கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெற்றோர் தங்களின் பிள்ளைகளை நேரடி வகுப்பிற்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் போது கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, முதல் கட்டமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில்,
- ஒரு வகுப்பில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால், ஒரு பிரிவிற்கு 25 மாணவர்கள் என பிரிக்கப்பட வேண்டும்.
- தகுந்த இடைவெளியை பின்பற்றி கூடுதலாக மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு வகுப்பறையில் கூடுதல் இட வசதியிருந்தால், கூடுதல் இருக்கைகளை அமைத்து அதிக மாணவர்களை அமர்த்திக் கொள்ளலாம்.
- மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவர்களை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளாக பிரித்து, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பறையில் கற்றுக் கொடுக்கலாம்.
- பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கும் முறைத் தொடரும். அவ்வாறு ஆன்லைன் மூலம் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலமாக தான் பாடம் நடத்த வேண்டும்.
- தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்புக்கு அரசு அனுமதித்து உத்தரவிட்டாலும், தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வமான இசைவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பெற்ற பின்னரே பள்ளியை திறக்கலாம்.
- பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைத்தப் பின்பு தான், மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
- மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. பெற்றோரின் முழு சம்மதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கும் திட்டமிட வேண்டும்.
- மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெற்றோரின் கருத்துக்களுடன் நாளை (ஜன.08) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனடிப்படையில் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்புத் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவு - பாரத் பயோடெக்