தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநராக, கடந்த 2017-ம் ஆண்டு செப்.29இல் அறிவிக்கப்பட்டாலும், அக்.6இல் பதவியேற்ற நாளை வைத்து இன்றுடன் மூன்று ஆண்டுகளை ஆளுநர் பன்வாரிலால் நிறைவு செய்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர்களில் மாவட்ட வாரியாக ஆய்வுக்குச் சென்ற இவர், மாநிலத்தின் 20ஆவது ஆளுநர் ஆவார். இவர், பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அவருக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "ஆளுநர் பொறுப்பில் நீங்கள் மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் முதிர்ந்த ஞானமும், சரியான நேரத்தில் வழிகாட்டுதலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில நிர்வாகத்துக்குப் பெரிதும் உதவியுள்ளது.
தமிழ்நாடு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உங்களது உற்சாகமான முயற்சிகள், பங்களிப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நல்ல உடல் நலத்துடன் தேசத்துக்கான உங்கள் மகத்தான சேவையைத் தொடர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.