சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக இளநிலையில் பி.எஸ்சி பேல்லியேட்டிவ் கேர் பட்டப்படிப்பும், முதுநிலையில் எம்.டி. பேல்லியேட்டிவ் கேர் பட்டமேற்படிப்பும், அடுத்து வரும் கல்வியாண்டுகளில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக துணை வேந்தர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 'மரணவலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை' குறித்த கருத்தரங்கம் இன்று (நவ.8) நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி பேசும்போது, 'புற்றுநோய் மற்றும் ஆட்கொல்லி நோய் உள்ளிட்ட பல கடும் நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு மருத்துவப் பராமரிப்பு மற்றும் செவிலியர் கவனிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பல்நோக்கு மருத்துவ அணுகுமுறை சிகிச்சை 'பேல்லியேட்டிவ் சிகிச்சை' (Palliative Care) ஆகும்.
இப்பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக ‘மரணவலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை’ குறித்து மருத்துவர்களும், பிற நல்வாழ்வுப்பணியாளர்களுக்கும் போதுமான பயிற்சியை அளிப்பதோடு, இது குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் நோக்கத்தில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், முதன் முறையாக அறிவு சார்ந்த காப்புரிமை மையமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா அளவில் இப்பல்கலைக்கழகமானது, 800-க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுடன் கடந்த 36 ஆண்டுகளாக சிறந்த முறையில் கல்விப் பணியாற்றி மருத்துவம், பல்மருத்துவம், மருந்தியல், இந்திய மருத்துவம், செவிலியர், இயன்முறை மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணைப்படிப்புகள் லட்சக்கனக்கான மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த பல இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று நடைபெற்ற இந்த ஒருநாள் பயிலரங்கத்தின் ‘பேல்லியேட்டிவ் கேர்’ எனப்படும் மரணவலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாட்டின் சிகிச்சை பிரிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, இப்பல்கலைக்கழகத்தின் முதன் முறையாக, இளநிலையில் பி.எஸ்.சி பேல்லியேட்டிவ் கேர் என்ற பட்டப்படிப்பும், முதுநிலையில் எம்.டி. பேல்லியேட்டிவ் கேர் என்கிற பட்டமேற்படிப்பும் அடுத்து வரும் கல்வி ஆண்டுகளில் தொடங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்காக மட்டுமின்றி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணிகளையும் மேற்கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்மருத்துவப் பல்கலைக்கழகமும், “பேல்லியம் இந்தியா” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இன்று கையெழுத்தி இடப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியின் காரணமாக, மரணவலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வானது தமிழ்நாடு மக்களுக்கும், இப்பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படவிருக்கும் பட்டப்படிப்புகள் மருத்துவம் சார்ந்தமாணவர்களுக்கு பெரிதும் பயன்தரும்' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க நடவடிக்கை: கல்லூரிக் கல்வி இயக்குனர் முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்!