சென்னை நங்கநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்கக் கோரி இளையராஜா என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவது தொடர்பாக தவறான அறிக்கை தாக்கல் செய்த பழவந்தாங்கல் காவல் ஆய்வாளரை இடைநீக்கம் செய்துள்ளதாகவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்தவர்களுக்கும், ஆய்வாளருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்தவர்களுக்கும் காவல் ஆய்வாளர் தொடர்பு இருப்பது குறித்து விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை இடைக்கால உத்தரவுக்காக ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.