சென்னை: கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதனால் அண்ணாமலை மீது ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி, டி.ஆர்.பாலு போன்றவர்கள் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்று ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
அதில், "சபரீசனுக்கும், உதயநிதிக்கும் கையில் வைத்திருக்கும் பணம் மட்டும் 30,000 கோடி ரூபாய் இருக்கும்" என பேசப்பட்டிருந்தது.
இதுகுறித்து சென்னையில் யாத்திசை திரைப்பட்டத்தின் சிறப்பு காட்சியை பார்வையிட்டதற்குப் பின்பு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "திமுகவில் பழனிவேல் தியாகராஜன் ஒருவர் தான் உருப்படி. அவரையும் தூக்கி விடுவார்கள் என நினைக்கிறேன். பிடிஆர் சொல்லவில்லை என்றால், யாருக்கும் உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோருக்கு எவ்வளவு சொத்து வைத்துள்ளார்கள் எனத் தெரியாமல் போய்விடுமா?. திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ள அண்ணாமலை அனைவரின் சொத்துப் பட்டியலையும் வெளியிட வேண்டும்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், "யாத்திசை திரைப்படம் தமிழ்த் திரையுலகில் பிரமிக்கத்தக்க ஒரு முயற்சி. முதல் காட்சியில் இருந்து படத்தின் ஒவ்வொரு நகர்வும் அவ்வளவு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
பன்னிரெண்டு மணி நேர வேலை தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சீமான், "பன்னிரெண்டு மணி நேர வேலை சட்ட மசோதாவை கண்டித்து நாம் தமிழர் கட்சி கடுமையாகப் போராடுவோம். சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம். பாஜகவை எதிர்க்கிறோம் என்று கூறும் திமுக முதலாவதாக 12 மணி நேர வேலை சட்டத்தைக் கொண்டு வருவது ஏன்?. தமிழ்நாட்டில் பாஜகவின் கிளைக்கழகமாக திமுக உள்ளது. பாஜக மற்றும் அதிமுகவில் உள்ளவர்கள் புனிதர்களா?. புதிய கல்வி கொள்கையை வேறு பெயரில், திமுக இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் புகுத்தி வருகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை!
இதையும் படிங்க: ரம்ஜான் விடுமுறை - சொந்த ஊர் செல்ல சென்னை விமானநிலையத்தில் குவிந்த பயணிகள்!