பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற தேவி நாச்சியப்பனிடம் நமது ஈடிவி பாரத் நடத்திய சிறப்பு பேட்டியில், நாம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:
பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆரம்ப காலத்திலிருந்தே என்னுடைய தந்தையார் குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா தான் எனக்கு சிறுவயது முதலே குழந்தை இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் காட்டிய வழியில் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு இந்த விருது கிடைக்கவில்லை. ஏனென்றால் 10 ஆண்டுகளாகதான் இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி.
குழந்தை இலக்கியம் படைப்பதில் எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது?
என் தந்தையார் எனக்கு மட்டுமல்ல, வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கதை, பாடல்கள் எல்லாம் சொல்லுவாங்க. அதேபோன்று அப்பாவுடைய நண்பர்கள் குழந்தை எழுத்தாளர்கள் நிறைய பாடல்கள், கதைகள் எல்லாம் சொல்லுவாங்க. அது எல்லாம் கேட்டு வளர்ந்தேன். அந்த நூல்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். அப்பொழுதுதான் நாமும் இது போன்ற குழந்தைகளுக்கான நூல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
முதலில் எந்த வயதில் நீங்கள் எழுத தொடங்குனீர்கள்?
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, என்னுடைய தந்தையாருக்கு குருவான கவிமணி பெயரில் சென்னை அண்ணாநகரில் எங்களுடைய வீட்டிலேயே கவிமணி குழந்தைகள் சங்கம் என்ற அமைப்பை தொடங்கி, அதற்கென அமைப்பாளராக இருந்தேன். சங்க ஆண்டு விழாவில் குழந்தைகள் கவியரங்கம், பட்டிமன்றங்கள் நடக்கும். அதற்கெல்லாம் என்னுடைய தந்தையார் கதை கட்டுரை தயார் செய்யச் சொல்லுவார். பட்டிமன்றத்துக்கு இந்தத் தலைப்பில் பேசுவதற்கு எழுதுன்னு சொல்லுவாங்க. அப்படி எல்லாம் எழுதும் பொழுது அப்பா அதில் திருத்தங்கள் செய்து கொடுப்பாங்க. அதுதான் என்னுடைய முதல் எழுத்து என்று சொல்ல வேண்டும். ஆனால், 22ஆவது வயதில் தான் என்னுடைய முதல் படைப்பு நூலாக வெளிவந்தது. இன்றும் குழந்தைகள் சங்கத்தை காரைக்குடியில எங்களுடைய இல்லத்தில் நடத்திக்கொண்டு வருகிறேன். 30 குழந்தைகள் மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருவாங்க. திறமையை வெளிப்படுத்துவதற்கும் எழுதுவதற்கான பயிற்சி பட்டறைகளாக செயல்படுகிறோம்.
இந்திய அளவில் குழந்தைகளுக்கான இலக்கியத்திற்கு எப்படி வரவேற்பு உள்ளது. இதற்கான விழிப்புணர்வு எப்படி உள்ளது?
ஆரம்ப காலத்தில் விழிப்புணர்வு அதிகமாக இருந்தது .1950இல் அதிக சிறுவர் பத்திரிகைகளில் இருந்தன. அந்த பத்திரிகைகள் மூலம் குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் மிகுதியாக இருந்தது. ஆனால், தொலைக்காட்சி, தொலைபேசி வந்ததால் குறைந்து உள்ளது. முதலில் பெற்றோர்கள் நல்ல நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். அதை குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். நூல்களில் உள்ள செய்தியறிந்து குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி ஆர்வம் மூட்டினால் குழந்தைகள் படிக்க முயல்வார்கள். அதோடு பால சாகித்ய புரஸ்கார் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம், குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா பெயரால் குழந்தை இலக்கிய விருது கொடுக்கிறார்கள். இதன் மூலமாக நிறைய குழந்தைகளுக்கு எழுதணும் என்ற ஆர்வம் உருவாகி இருக்கு என்பது மகிழ்ச்சி.
மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் குழந்தைகள் இலக்கியம் நம் நாட்டில் போதுமான அளவில் உள்ளதா அல்லது இலக்கியம் மேம்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
நம் நாட்டில் அனைத்து துறை நூல்கள் இருக்கின்றன. கட்டுரை நூல்கள், அறிவியல் சம்பந்தமான நூல்கள், வரலாற்றுப் பின்னணியோடு கூடிய நூல்கள், நாடக நூல்கள் எல்லாமே கிடைக்குது. ஆனால், மேலை நாடுகளில் அழகான வண்ண படங்களோடு புத்தகங்கள் வெளியிட்டிருக்கும்.
அந்த வசதி நமக்கு மிகவும் குறைவாக இருக்கு. அதுக்கு என்ன காரணம் என்றால், இது போன்ற அழகான தாள்களில் புத்தகம் வெளியிட்டால் 300 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். அந்த அளவிற்கு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செலவிடுவார்களா என்ற சந்தேகம் பதிப்பகத்தாருக்கு உண்டு. வருங்காலங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இது போன்ற நூல்களை வாங்கிக் கொடுத்தால் நல்ல புத்தகங்கள் குழந்தைகளிடம் சென்று அடைய வாய்ப்புள்ளது.
தற்போது உள்ள குழந்தைகளின் வாசிப்புத் திறன் எப்படி உள்ளது?
கண்டிப்பாக குறைவாகத்தான் உள்ளது. ஒரு வீட்டில் பெற்றோர் எப்படி இருக்கிறார்களோ, அதே போன்று தான் குழந்தைகளும் இருப்பார்கள். பெற்றோர்கள் அதிக அளவில் புத்தகங்களை படித்தால் குழந்தைகளுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் உருவாகும்.
ஆனால், தற்போது எதற்கு எடுத்தாலும் நேரம் இல்ல. எல்லாமே கைபேசியில் பாத்துக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. என்னதான் இணையங்களில் நம் தகவல்களை எடுத்துக் கொண்டாலும் புத்தகங்களில் படிக்கும் சுகமான அனுபவம் நிச்சயமாக இணையத்தில் கிடைப்பதில்லை.
உங்களின் அடுத்த இலக்கு என்ன?
நிறைய எழுதி இருக்கேன். குழந்தைகள் இலக்கியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், குழந்தை இலக்கிய வரலாறு, பயணக்கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதை கதையாக அல்லது கட்டுரையாக எழுதலாமா என்று யோசிக்கிறேன். குழந்தைகளுக்கு என்னுடைய படைப்புகள் சேரணும் என்று ஆசைப்படுகிறேன். அதுக்கு ஒரு வழி அமைத்துக் கொடுத்தது சாகித்ய புரஸ்கார் விருது. இந்த விருது கொடுக்கக்கூடிய உற்சாகத்தில் மேலும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.