ராஜிவ் காந்தியின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சைதாப்பேட்டையில் உள்ள ராஜிவ் காந்தியின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்ற மாபெரும் தலைவர் ராஜிவ் காந்தி. இந்தியா இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் ராஜிவ் காந்தி பங்கு மகத்தானது.
ஜனநாயகத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவரான ராஜிவ் காந்தியை, ஜனநாயகம் மீது நம்பிக்கையற்ற சிலர், வன்முறை மீது நம்பிக்கை வைத்துக் கொன்றனர். இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்காக பாடுபட்ட ஒரே இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திதான். தற்போது ஜனநாயகத்தை மோடி முழுவதுமாக அழிக்கப் பார்க்கிறார்" என்று கூறினார்.
ப. சிதம்பரத்துக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை (சம்மன்) குறித்த கேள்விக்கு, ஆளும் கட்சி நினைத்தால் எத்தனை அழைப்பாணை வேண்டுமானாலும் அனுப்பலாம். மடியில் கனம் இருந்தால்தான் பயப்பட வேண்டும் என்றார்.
மேலும், ப. சிதம்பரம் குறிவைக்கப்படுவது குறித்து கே.எஸ். அழகிரி, இந்தியாவில் மோடியை எதிர்த்து அதிகம் பேசுபவர் ப. சிதம்பரம் என்பதால்தான் அவர் குறிவைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீர் விவகாரத்தில் டெல்லியில் நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.