சென்னை: மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 281 பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிமாக உள்ளது.
நடப்பு 2021 - 22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய ஒரே வாரத்தில், மாநகராட்சி பள்ளிகளில் 6897 பேர் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி, மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-20ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 18,605. இதில் தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி, மாநகராட்சி பள்ளிகளில் 6,533 சேர்ந்தனர்.
அதே போல, 2020 - 21ஆம் கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக 27,843 மாணவர்கள் சேர்ந்தனர். இதில் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 14,763.
நடப்பு 2021 - 22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய ஒரே வாரத்தில் 6,897 பேர் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இன்னும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் மாநகராட்சி பள்ளியில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சில அரசுப் பள்ளிகளில் சேர்க்கையின்போது கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறை மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் விண்ணப்பம் உட்பட எதற்கும் கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் சமூகநீதிக்கு எதிரானது - சூர்யா