தேசிய அளவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வலுக்கும் சூழலில் தமிழ்நாட்டிலும் இதற்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன. அந்தவகையில், தமிழ்நாடு அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, 146 பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை சின்னமலை பகுதியில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, 261 சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் கல்வி - வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
மேலும், அரசியல் ஆதாயத்திற்காக முந்தைய ஆட்சியில் சட்டவிரோதமாக, எந்தவித சாதி வாரி புள்ளிவிவரங்கள் இல்லாமல் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகக் கூறி, அச்சட்டத்துக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சியாக இருந்தபோது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்ததும் திமுக அதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூகங்களின் எண்ணிக்கை, வளர்ச்சிக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், அதுவரை பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக வன்னியர் சமூகத்தைச் சாராத மற்ற சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
வாக்கு வாங்கிக்காக ஒரு சமுதாயத்தை மட்டும் ஆதரித்தால் மற்ற சமுதாயத்தினர் ஓரணியில் திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சமூக நீதி கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.
இதற்கிடையே, செய்தியாளரிடம் பேசிய இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, ”எங்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசு, அனைத்து அரசியல் கட்சிகளிடம் முன்வைத்துள்ளோம். இருப்பினும் இதுவரை எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இது குறித்து கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவுசெய்யப்படும்” என்றார்.