தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தற்போது இந்த தேர்வில் வெற்றி பெற்றோருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 37 பேர் தேர்வாகி உள்ளனர்.
அதில் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், தமிழ் தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு மின்சாரத் துறையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ரயில்வே தேர்விலும் அதிகளவிலான வட இந்தியர்கள் தேர்வாகி தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களில் நிரப்பப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது தமிழ்நாடு மின்துறையிலும் வட இந்தியர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வாறு சேவை புரிவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.