சென்னை, நாகப்பட்டினத்தில் இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படக் கூடிய இயக்கத்தினர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் நாகையை சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முஹம்மது என்ற இருவரை கைதுசெய்து சென்னையில் உள்ள நீதிபதி செந்தூர்பாண்டி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே இயக்கத்துடன் தொடர்புடைய 14 பேர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்ததும், அங்கு அவர்கள் 6 மாதம் அந்நாட்டு விசாரணையில் இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த 14 பேரும் நாடு கடத்தப்பட்டு டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லி விரைந்தனர். டெல்லியில் பதுங்கியிருந்த 14 பேரை கைதுசெய்து அவர்களை தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வந்து, அங்கிருந்து பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட முகமது ஷேக் மொய்தீன், அகமது அசாருதீன், தவுபிக் அகமது, முகமது அக்சர், மொய்தீன் சீனி சாகுல் அமீது, முகமது இப்ராஹிம், மீரான் கனி, குலாம் நபி ஆசாத், ரபி அகமது, முன்தாசீர், உமர் பாரூக், பாரூக்,பைசல் செரீப், முகமது இப்ராஹிம் ஆகிய 14 பேரையும் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவர்களை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டி, 14 பேரையும் வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதியின் உத்தரவு படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 14 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.