சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வி.கே.சசிகலா வீட்டில் 2017 ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக, வி.எஸ்.ஜே.தினகரன் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையில் ரூ.1,600 கோடி மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளதாகக் கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், நவீன் பாலாஜி, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து தினகரன், நவீன் பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை நடவடிக்கை தொடர உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிராசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் தங்களுக்கு எதிராக சாட்சியமளித்தவர்களின் வாக்குமூலங்களை முழுமையாக வழங்கவில்லை.
அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது. மூதாதையர்களின் சொத்துக்களையே கட்டுமான நிறுவனத்துடன் ஜாயிண்ட் வெஞ்சர் முறையில் ஒப்பந்தம் போட்டது என்றும், பினாமிதாரர்களாக இடத்தை விற்றதாக கூறுவது தவறு. அதனடிப்படையில் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை எடுத்த ஆரம்பகட்ட அதிகாரியின் (initiating officer) செயல் சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.
மேலும், வருமான வரித்துறை தரப்பில், தங்கள் துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள், புகைப்படங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதுதான். ஆரம்பகட்ட அதிகாரி எடுத்த நடவடிக்கை சரியானதா? இல்லையா? என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் ஆரம்பகட்ட அதிகாரிக்கு அடுத்த கட்ட அதிகாரிக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ஏப்.28-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை : கே.எஸ்.அழகிரி அறிவிப்பு