சென்னை: 2014ஆம் ஆண்டில் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற அலுவலர் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பில் இருந்து காலி செய்யுமாறு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசு இல்லங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வரும் காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், காவலர்களை ஆர்டர்லிகளாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இந்த வழக்கு இன்று (ஜூலை 25) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், ’உள்துறைச்செயலாளர் சார்பில், 2 வாரங்களில் சம்பந்தப்பட்ட ஆர்டர்லிகளை காவல்பணிக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என அறிக்கை பிறப்பித்துள்ளார்.
உயர் அலுவலர்களுக்குத் தவிர்க்க முடியாத காரணங்களால் கூடுதல் ஓட்டுநர்கள் தேவை என்றால், சம்மந்தப்பட்ட டிஐஜி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு அரசு மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
உயர் அலுவலர்களுக்கு தனி ஆர்டர்லிகளை நீக்கிவிட்டு, கணிணி, ஓட்டுநர் தேவை என்றால் பணி அடிப்படையில் காவலர்களை பணியில் அமர்த்திக்கொள்ளலாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அரசாணையின்படி சில உயர்மட்ட காவலர்கள் சொந்த வாகனங்களைப் பணிக்கு உபயோகப்படுத்துவதால், சில காவலர்கள் ஓட்டுநர்களாகப் பணியில் அமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ’’சட்டம் எப்போதெல்லாம் மீறப்படுகிறதோ? அப்போதெல்லாம் இந்நீதிமன்றம் தனது கண்களை மூடிக் கொண்டிருக்காது. அடிமட்ட காவலர்கள் தொடங்கி அனைத்துக் காவலர்களின் நடத்தைகளை கேள்வி எழுப்பும் நீதிமன்றம்? ஏன் உயர்மட்ட காவல் அலுவலர்கள் தவறு செய்தால் கேள்வி எழுப்பக்கூடாது. உயர்மட்ட அலுவலர்கள் உதாரணமாக இல்லாதபோது, அடிமட்ட காவலர்களை எப்படி நாம் சட்டப்படி செயல்பட வைக்க முடியும்.
1979ஆம் ஆண்டு ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது: காவல் துறை எப்போதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும், இல்லாவிடில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போல இங்கேயும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் கடந்த 1979ஆம் ஆண்டு ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டது. தற்போது வரை அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது. 39 ஆர்டர்லிகள் டிஐஜி வீடுகளில் இருப்பதாகத் தெரியவருகிறது.
தொலைபேசி கண்காணிப்பாளர், கணினி ஆப்பரேட்டர், சமையலர், துணி துவைப்பவர், தோட்டக்காரர்கள் என உள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு தான் காவல்துறை இயக்குநர், ஆர்டர்லி முறை தவறு என சுற்றறிக்கை வெளியிடுகிறார். நீதிபதிகள் பணிக்கான உதவியாளர்களை மட்டுமே, வைத்திருக்கிறார்கள், காவலர்களை ஆர்டர்லிகளாக வைத்திருக்கவில்லை.
ஆர்டர்லியாக இருக்கக்கூடிய காவலர்கள் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் பணிக்கு உடனே திரும்ப வேண்டும். தொடர்ந்து ஆர்டர்லி முறையைக் கையாளும் காவலர்கள் மீது 1968 அகில இந்திய நன்னடத்தை பணிகள் விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் ஆர்டர்லி முறையைக் கைவிட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவை தமிழ்நாட்டில் இன்னும் அமல்படுத்த முடியவில்லை. ஆர்டர்லி முறையை ஒழிக்க புதிதாக எந்த சட்டமும் தேவை இல்லை.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்: உயர் அலுவலர்கள் ஆர்டர்லியை உபயோகப்படுத்தினால், அரசு உத்தரவை மீறியதாகக் கருதி உள்துறைச்செயலாளர் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் உள்ள அலுவலராக இருந்தாலும், ஓய்வுபெற்ற அலுவலராக இருந்தாலும், அரசு உத்தரவை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். உயர் அலுவலர்கள் நன்னடத்தையோடு மட்டும் செயல்பட்டால் மட்டும் போதாது, இந்திய அரசியலமைப்பின்படி தாமாகவே முன் வந்து ஆர்டர்லி முறைகளை கைவிட வேண்டும்.
சாதாரண காவலர்கள் ஆர்டர்லிகளாக துன்புறுத்தப்பட்டால் உள்துறைச்செயலாளருக்கு புகார்களை அளித்து உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம். பணியில் உள்ள அலுவலர்களின் அலட்சியமே, ஓய்வுபெற்ற அலுவலர்கள் அரசு பலன்களை அனுபவித்து வருவதற்குக் காரணம், இது சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது’’ எனத்தெரிவித்தார்.
மேலும், அரசு தரப்பில் ஆர்டர்லி முறையை முழுமையாக திரும்பப்பெறும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: மின்சார மீட்டரின் வாடகை கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!