சென்னை: ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்கக்கோரி, கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப்.17) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , "கடந்த 6 மாதங்களில் ஐஐடியில் 49 நாய்கள் இறந்துள்ளன. கூட்டுக்குழு ஆய்வறிக்கையின்படி ஐஐடியில் இருக்கும் 14 நோய்வாய்ப்பட்ட நாய்களை கால்நடை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். தொடர்ந்து எத்தனை நாய்கள் இறந்துள்ளன என்பது குறித்து கணக்கீடு செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
நாய்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை
பின்னர் ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஐஐடி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன. நாய்களை வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் ஐஐடி வளாகத்தில் விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாகின்றன. இந்த நாய்களை பராமரிப்பதற்காக தனி இடம் பராமரிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "ஐஐடி வளாகம் உயிரியல் பூங்காவோ, நாய்கள் பூங்காவோ அல்ல. நாய்களை பராமரிப்பது ஐஐடியின் பணியல்ல. கைவிடப்பட்ட நாய்களை விட்டுச் செல்லும் பகுதியாக ஐஐடி மாறாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஐஐடி வளாகத்தில் ஏராளமான மான்கள் இருப்பதால், அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாடிய அதிமுக