சென்னையில் குற்றங்களை தடுத்தல், குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசு, தொண்டு நிறுவனங்கள் மூலமாக முக்கிய இடங்களில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினரால் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் மூலமாக பல குற்ற வழக்குகள் எளிதாக முடிக்கப்பட்டு, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சிசிடிவி கேமராக்களால் சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிசிடிவி கேமராக்களினால் சென்னை பாதுகாப்பான நகரமாக திகழ்வதாக சமூக ஆர்வலர்கள் பலர் பாராட்டி வந்தனர். சமீப காலமாக பெரும்பாலான முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதால் குற்ற வழக்குளில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சென்னையில் பழுதடைந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்களை சீர்செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த நிதி ஆண்டில் இயந்திரங்கள், உபகரணங்கள் பராமரிப்பு தலைப்பின் கீழ் ரூ.1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகையை ஐந்து மண்டலங்களில் பழுதடைந்து காணப்படக்கூடிய சிசிடிவி கேமராக்களை சீர் செய்ய வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிழக்கு மண்டலத்தில் 3 ஆயிரத்து 856 சிசிடிவி கேமராக்களும், மேற்கு மண்டலத்தில் 639 சிசிடிவி கேமராக்களும், தெற்கு மண்டலத்தில் 4,817 சிசிடிவி கேமராக்களும், வடக்கு மண்டலத்தில் 1,815 கேமராக்களும், போக்குவரத்து மண்டலத்தில் 1,228 சிசிடிவி கேமராக்களும் என மொத்தம் 12 ஆயிரத்து 355 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை விரைவாக பழுது நீக்கவும், அனைத்து சிசிடிவி கேமராக்களும் நல்ல முறையில் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காப்பாத்துங்க...ப்ளீஸ் - சாலையில் கதறி அழுத காதலர்கள்!