சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பள்ளிக்கல்வித்துறையில் ஜூன் 1ஆம் தேதி , மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர் அளவிலேயே கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
ஜூன் 1ஆம் தேதி நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு, பொதுப் பணியாளர்களைத் தங்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கோயம்புத்தார் மற்றும் மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆகியவற்றில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்துகொண்டு புதிய பணியிடத்தைத்தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.
பட்டியலில் உள்ளபடி மாறுதல் கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிர்வாக மாறுதல் அளிக்கப்படும்.
வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும்போது மாவட்டத்திற்குள் பணியிடம் இல்லாத நிலையிலோ, பணியாளர் வேறு மாவட்டத்தைக் கேட்டாலோ, அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை ஆணையரகத்திற்கு அனுப்ப வேண்டும்' எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடர் பெட்ரோல் குண்டு சம்பவங்கள்... தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு...