சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமை சமீப காலமாக அதிகரித்துள்ளது. அதேபோல் மாணவர்கள் மீது ஆசிரியர்களின் வன்முறையும் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தற்போது பாதுகாப்புகள் குறைந்துள்ளன.
ஆகையால் மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறைகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை (child violence prevention awareness) ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆய்வுகள் மேற்கொள்ள அதிகாரம்
இது குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ”ஒன்றிய அரசின் 2005ஆம் ஆண்டுக்கான குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு தலைவர், ஆறு உறுப்பினர்கள் நியமனம்செய்யப்பட்டு இயங்கிவருகிறது.
மேலும் இந்த ஆணையத்திற்கு குழந்தைகளின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை அனுப்ப உத்தரவு
ஆணைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நவம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேசிய குழந்தைகள் நாள், குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நாள், பன்னாட்டு குழந்தை உரிமைகள் நாள் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
குழந்தைகள் மீதான வன்முறைத் தடுப்பு விழிப்புணர்வை பள்ளி குழந்தைகளுக்கு நேர்முக வகுப்பு வழியிலோ அல்லது ஆன்லைன் வகுப்புகளிலோ நடத்த வேண்டும். அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Schools, colleges to remain closed: 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.19ஆம் விடுமுறை