சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இறுதியாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரை ஓரம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து ஈபிஎஸ் நீக்கம் செய்தார். மிக முக்கியமாக மக்களவையில் அதிமுக சார்பாக இருந்த ஓபிஎஸ் மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி-யையும் நீக்கினார். நீக்கியதோடு மட்டும் அல்லாது ரவீந்திரநாத் எம்.பியின் அதிமுக அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ப.ரவீந்திரநாத் நீக்கம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ரவீந்திரநாத் எம்.பியை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என்ற ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் ரவீந்திரநாத்தை அதிமுக அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்கக்கொள்ள கூடாது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கும் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே ஈபிஎஸ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு அனுப்பிய கடிதத்தை ஏற்கக்கூடாது என ப.ரவீந்திரநாத் எம்.பி கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்கக் கோரி ஓபிஎஸ் கடிதம்!