சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே உள்ள தனியார் குடியிருப்புக்கு சொந்தமான கிளப் ஹவுஸ் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு திடல் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட கிளப் ஹவுஸை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘கட்டுமான சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை சாளர முறை இன்னும் ஓரிரு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், வீட்டு மனைகள் பதிவு செய்வதற்கான கட்டண குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும், இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.
அதேபோல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழ்நாடு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று உறுதியளித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.