சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.
பழங்குடியினர் குடியரசுத்தலைவராக வருவது பெருமைக்குரியது. அதிமுகவில் பொதுக்குழுவே இறுதி அதிகாரம் படைத்தது. பொதுக்குழுவில் கலந்து கொண்டு, அந்த முடிவிற்கு ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒற்றைத்தலைமையே அதிமுக தொண்டனின் விருப்பம். அதிமுக இதுபோன்ற சந்தர்ப்பங்களை சந்திப்பதற்கு காரணமே ஓ.பன்னீர்செல்வம் தான்.
அனைத்திற்கும் காரணங்களை உருவாக்கிவிட்டு நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், தொண்டர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாமா? இது தொண்டர்களை ஏமாற்றும் செயல். பொதுக்குழுவிற்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள்.
செந்தில் பாலாஜி என்ன பிரமாண்டத்தை ஏற்படுத்தப்போகிறார் எனத் தெரியவில்லை. மகாராஷ்டிரா போல தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி, சேகர்பாபு இருவர் மட்டும் போதும்" எனப் பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தனியாகவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனியாகவும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆதரவுகோரினார் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு!