சென்னை: பொங்கல் திருநாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி - சேலை வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "எம்.ஜி.ஆரால் ஏழை எளிய மக்களுக்காக, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டம் 1983ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வேட்டி - சேலைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து 10 நாட்கள் கடந்தும் நியாய விலைக் கடைகள் மூலம் இலவச வேட்டி - சேலை வழங்கப்படாதது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தினை திமுக அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும், இதனைத் தொடர வலியுறுத்தி நெசவாளர்கள் போராட்டம் நடத்துவதாகவும் சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், இதற்கான நிதி 2022 - 23 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இலவச வேட்டி - சேலைத் திட்டம் தொடரும் என்றும் உறுதி அளித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி - சேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும், இதற்கென கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வேட்டி - சேலையை மாற்றி, தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே வடிவமைப்பில் பத்து ஐந்து வழங்கப்பட்டு வடிவமைப்புகளில் வந்த சேலைகள் வேட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே விநியோகிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.
இந்தப் புதிய வடிவமைப்புகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டது போன்ற புகைப்படமும் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. ஆனால் இன்று பொங்கல் பண்டிகை முடிந்து பத்து நாட்கள் மேலாகியும் இலவச வேட்டி - சேலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலேயே இலவச வேட்டி - சேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் திட்டத்தை குறித்த காலத்திற்குள் செயல்படுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பொங்கல் பண்டிகையன்று புத்தாடை அணிந்து கொள்ள இயலாத சூழ்நிலை பெரும்பாலான ஏழை, எளிய மக்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல், பொங்கல் பண்டிகையே முடிந்த நிலையில், இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது. இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசிற்கு இருக்கிறது.
முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி - சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிபிசியின் மோடி ஆவணப்படம்; 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை பாதிக்குமா?