சென்னை: கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் அதிமுக நிர்வாகிகள் சிலர் ரத்து செய்ததைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து வெளியேறினார். நேற்றைய தினம் மதுரையில் இருந்து தேனி வரை சாலை மார்க்கமாக ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் அதிமுக தலைமைக்கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை ஓரம் கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று(ஜூன் 27) நண்பகல் தேனியிலிருந்து சென்னை வந்தடைந்தார்.
அடுத்தகட்ட நகர்வு சட்டரீதியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞர் திருமாறன் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதில் எப்படியாவது பொதுக்குழுவை கூட்ட விடாமல் தடுப்பதற்கும் மற்றும் ஒற்றைத்தலைமை முடிவு எடுப்பதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே நடந்த பொதுக்குழுவில் ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மறைமுக பாஜக ஆதரவில் இருந்த ஓபிஎஸ்ஸின் சாயம் வெளுத்துவிட்டது' - போட்டுத்தாக்கிய கார்த்தி சிதம்பரம்!