சென்னை: கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், தீர்மானம் நிறைவேற்ற பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உத்தரவிட்டு பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதேநேரம் இந்த தீர்ப்பு உரிமையியல் வழக்கு தொடர தடையாக இருக்காது எனவும் குறிப்பிட்டது. இதனிடையே அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அந்த மனுவில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டு உள்ளார். இந்த மனு இன்று (மார்ச். 3) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: "மகன் விட்டுச் சென்ற திட்டங்களை செயல்படுத்துவேன்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்!