சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் வேட்பாளர் போட்டியிட்டால் நாங்கள் வேட்பாளரை திரும்ப பெற்றுக்கொள்வோம். சசிகலாவிடம் ஆதரவு கேட்போம். பரப்புரைக்கு சசிகலா வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.
பாஜகவினர், ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தால் எங்களின் நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கட்சியின் தீவிர விசுவாசி. கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆவார். இடைத்தேர்தலில் எங்களுக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது.
மக்களிடம் கருத்துக்கேட்டு பேனா சிலையினை வைக்கலாம். இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு எந்த காலத்திலும் நான் காரணமாக இருக்க மாட்டேன். 2026ஆம் ஆண்டு வரை நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அதனால், எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். விரைவில் இடைத்தேர்தல் களத்திற்குச் செல்ல இருக்கிறோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "தமிழ்நாடு அரசு தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்வார்கள்": அமைச்சர் எல்.முருகன்