சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று 'ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4' எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள், மறைமுகமாக பிரதமர் மோடி, ஒன்றிய அரசு கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
ஒன்றிய அரசு நோட்டீஸ்
'ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4' சர்ச்சை நிகழ்ச்சி குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பகிரங்க மன்னிப்பு?
சர்ச்சை நிகழ்ச்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கரூரில் செய்தியாளர்களிடத்தில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “பிரதமர் குறித்து ரியாலிட்டி ஷோவில் அவதூறு செய்யப்பட்டிருப்பதால் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையை இணையதளம் மூலம் நடத்த பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா? குடியரசு தின விழாவில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசின் மீது விஷம பரப்புரையை முன்வைத்து வருகிறது” என்றார்.
குற்றமுள்ள நெஞ்சமே குறுகுறுக்கும்
இந்நிகழ்ச்சி குறித்து சிபிஐஎம் பாலகிருஷ்ணனும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் பேசுகையில், “தனியார் தொலைக்காட்சியில் இரண்டு சிறுவர்கள் பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி முறையற்ற ஆட்சியாளர்களை எள்ளி நகையாடுகிறது. அதில் எந்த தலைவரையும் எங்கும் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசியல் செய்வது வருந்தத்தக்கது
இதுகுறித்து எழுத்தாளர் செந்தில்நாதன் அலைபேசி வழியாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் பேசுகையில், “ஒரு நகைச்சுவையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தலைவர்களை விமர்சிப்பது எதார்த்தமான ஒன்று. இது காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
இதனை நகைச்சுவையை நேசிக்கும் அனைவரும் வரவேற்பார்கள். இந்த குழந்தைகளின் நிகழ்ச்சியை பார்த்து அரசியல் செய்வது வருந்தத்தக்க செயல் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'காசு, புகழ வைச்சு என்ன பண்ண?' - வருத்தத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்?