கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை அமைப்பு திட்டமிட்டபடி நாளை (செப்.,13) நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நீட் தேர்வின் அச்சத்தினால் மாணவர்கள் தவறான முடிவை எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீட் தேர்வு பயத்தினால் மாணவி துர்கா தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒட்டு மொத்தமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் தான் மாணவச் செல்வங்களின் உயிரிழப்புகளை தடுக்க முடியும். எனவே மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
”மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்பு காரணமாக தமிழ்நாட்டில் மாணவ - மாணவிகள் தொடர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. இன்று (செப்டம்பர் 12) மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வு எழுத ஆயத்தமாகிக் கொண்டிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாதாரண ஏழை, எளிய, பின்தங்கிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வில் எவ்வளவு அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும், நீட் தேர்வால் வடிகட்டப்பட்டு, அவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. மத்திய அரசின் இக்கொடூரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாக இல்லை. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் இதுபோன்ற உயிரிழப்புகள் தடுக்கப்படுவதுடன், சமூக நீதியையும் நிலை நாட்ட முடியும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ”நீட் தேர்வு விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். பெற்றோரும் பிள்ளைகள் மீது தங்கள் ஆசைகளை திணிக்க வேண்டாம். நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும். இது போன்ற தேர்வுகள் எவ்வளவு மன அழுத்தத்தை மாணவர்களுக்கு தருகின்றது என்பதை இந்த இறப்புகள் உணர்த்துகின்றன. மத்திய - மாநில அரசுகள் நீட் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி துர்காவின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாடு அரசு துர்கா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:’மத்திய, மாநில அரசுகளின் கொலைகள் தான் நீட் மரணங்கள்’ - கனிமொழி ஆவேசம்