சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று (ஏப்.6) தொடங்கி நடைபெற்றுவருகிறது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் உயர்த்தப்பட்ட சொத்து வரி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். பேரவை உறுப்பினர்களும் வரி உயர்வு குறித்து பேசினர்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்த வரி உயர்வு மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு சொத்துவரியை உயர்த்த எந்த அறிவிப்புகள் செய்யவில்லை. தமிழ்நாடு அரசு உயர்த்தப்பட்ட சொத்து வரியைத் திரும்ப பெற வேண்டும் என்று பேசினார்.
நயினார் நாகேந்திரன் (பாஜக) பேசுகையில், “திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்ப பெற வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே மணி, “சொத்து வரி உயர்வு முடிவை அரசு தள்ளிவைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதே போல கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய மதிமுகவின் சதன் திருமலை குமார், “அரசு சொத்து வரி உயர்வுக்கு வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடி போன்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சொத்து வரியை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 'தளி' ராமசந்திரன் கூறும்போது, மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சொத்து வரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.