சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க நாளான இன்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. ஆளுநர் தனது உரையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை முழுவதுமாக வாசிக்காமல், தவிர்த்தார்.
"பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் கொள்கைகளைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது," என்ற வரியை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை உரையிலிருந்து புறக்கணித்துள்ளார்.
சட்டமன்றப் பேரவை விதி 17ஐ தளர்த்தி, அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும் எனவும்; இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்ற தீர்மானங்களை முன்மொழிவதாகவும் முதலமைச்சர் பேசினார்.
இதனால் தேசியகீதம் இசைத்து அவை முடியும் முன்பாக ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். பின் முதலமைச்சரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு அரசு தரப்பில் வழங்கப்பட்ட உரையை முழுமையாக படிக்காமல் சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்தது தற்போது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. திமுகவினரும் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து ''ஈடிவி பாரத் தமிழ்நாடு'' ஊடகத்திடம் பேசிய மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறியதாவது, ''இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, தமிழ்நாடு அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் கண்டிப்பாக ஆளுநர் வாசிக்க வேண்டும். ஆளுநர் மத்திய அரசு அதிகாரி கிடையாது, மற்ற மாநிலங்களோடு நிதி நிலை அறிக்கைகளை, மாநில அரசு ஒப்பிட்டு சொல்வதை, ஆளுநர் புறக்கணிக்க முடியாது.
ஆளுநரின் பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவோ, சேர்க்கவோ, சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆளுநர் தனி நிகழ்ச்சியில் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம், ஆனால், சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் குறிப்புகளை மட்டுமே பேசமுடியும். தன்னிச்சையாக அவை மரபுகளை மீறமுடியாது. ஆளுநர் மாளிகையில் செயல்படுவது வேறு, சட்டப்பேரவையில் ஆளுநர் செயல்படுவது வேறு. மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் தான், சட்டப்பேரவையில் அதிகாரமுண்டு'' என்றார்.