சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் தவறான விசயங்களை திட்டமிட்டு திணித்துள்ளனர்.
பாடத்திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எம்.ஏ முதலாமாண்டு அரசியல் அறிவியல் துறையில் தவறான தகவல்களைப் பதிவு செய்துள்ளனர்.
எனவே துறை தலைவர்கள், அனுமதித்த பல்கலைக்கழக வேந்தர்களை விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
அதுகுறித்து விசாரிக்கக் குழு நியமனம் செய்து முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.
இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் விசாரித்தப்போது, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் புதியப் பாடத்திட்டத்திற்காக கடந்த ஆண்டே அனைத்து படிப்புகளுக்கும் புதிய பாடதிட்டம் கொண்டு வரப்பட்டு, புத்தகங்கள் எழுதும் பணியும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப்புத்தகம் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கல்விக்குழு, ஆட்சிமன்றக்குழு ஆகியவற்றின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவும் இடம்பெறவில்லை.
கடந்த 2005ஆம் ஆண்டு எழுதப்பட்ட அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது தற்போது வெளியாகி உள்ளது.
சர்ச்சைக்குரிய பாடப்பகுதியில் இருந்து தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறாது என, திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'யானை மீட்பும் கரோனா மீட்பும்' - ஐடியா தந்த ஆனந்த் மஹிந்திரா