சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டுத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 26) உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய திருவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி செ. அமிர்தராஜ், 'முன்பெல்லாம் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி உணவு கொடுப்போம். ஆனால், தற்போது தொலைக்காட்சி, அலைபேசி உள்ளிட்டவற்றை காட்டியே உணவு உட்கொள்ள வைக்க வேண்டியுள்ளது.
இதனால் குழந்தைகள் பள்ளியில் கற்றல் குறைபாடு, கவனக்குறைபாடு உடையவர்களாக வளர்கின்றனர்.
இந்த குறைபாடு 60 பேரில் 5 பேருக்கு ஏற்படுகிறது. ஆகவே, அதை மாற்றிட மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
சிறப்புக் கவனம்
கல்வியில் உலக அளவில் தமிழ்நாடு சிறந்திட உயர் கல்விக்கு சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டும். "Knowledge capital of our country" என தமிழ்நாடு மாறுவதற்கு மாணவர்களை மேம்படுத்த குழு அமைக்க வேண்டும்.
அதேபோன்று ஆராய்ச்சி பூங்காவில் (Research park) ஆய்வு செய்து அங்கேயே அறிக்கை சமர்ப்பித்திட ஆராய்ச்சி பூங்கா அமைக்க வேண்டும். அதனால் கண்டுபிடிப்பு அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும்' எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'இது தொடர்பாக ஆராய்ச்சிக்கென்றே நிதி அறிக்கையிலேயே குழு அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்காக மன்றம் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதையும் படிங்க: ’தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களே மாறி மாறி ஆட்சிக்கு வரும்’- செங்கோட்டையன்