சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் குமார். இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். குமார் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆன்லைன் பகுதி நேர வேலை எனக்கூறி சுமார் 16 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். குமாருக்கு டெலிகிராம் மூலமாக பகுதி நேர வேலை உள்ளதாக கூறி தொடர்ந்து பல்வேறு குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
அதுபோன்று வந்த ஒரு குறுஞ்செய்தியில் கார்ப்பரேட் டிராவல் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திற்காக செயல்படும் உப நிறுவனம் ஒன்றில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பியதை விசாரணை செய்துள்ளார். அதில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் உலகத்தில் உள்ள பல்வேறு ஹோட்டல்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றிற்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் பணம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக லிங்க் ஒன்றை அனுப்பி அதில் தங்களது விவரங்களையும் ஆவணங்களையும் பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். ஐடி ஊழியரான குமார் தனது ஆவணங்களை வாட்ஸ் அப் மூலம் யாருக்கும் அனுப்ப முடியாது என எச்சரிக்கையாக இருந்துள்ளார். இருப்பினும் நிறுவனத்தைப் பற்றி ஆன்லைனில் ஆய்வு செய்த போது கார்ப்பரேட் டிராவல்ஸ் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் சர்வதேச நிறுவனம் என்பது இவருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து இவர்கள் அனுப்பும் லிங்க்கில் அனைத்து தகவல்களையும் பதிவிட்டு உறுப்பினராகியுள்ளார். முதற்கட்டமாக உறுப்பினரானவுடன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை குமாரின் வங்கி கணக்கிற்கு நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த பணத்தை பெறுவதற்கு 30 ஹோட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்து தங்களது வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பத்தாயிரம் ரூபாய் பணமும் இவருக்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்து அசைன்மெண்டுகள் கிடைப்பதற்கு பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இவ்வாறாக முப்பதாயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி 24 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை ரேட்டிங் கொடுத்து சம்பாதித்துள்ளார். இவ்வாறு பகுதி நேர வேலை செய்யும் நபர்கள் இணைத்து ஒரு whatsapp குழுவையும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அதில் பலரும் தினம் தான் இவ்வளவு பணம் சம்பாதித்ததாக ஸ்கிரீன் ஷாட் போடுவதைக் கண்டு தீவிரமாக இந்த பணியில் செயல்பட ஆரம்பித்துள்ளார்.மேலும் பெங்களூரில் இருந்து யாழினி என்ற பெண் தானாக வந்து whatsapp மூலம் நட்பாக பழகி பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தானும் பகுதி நேர வேலை பார்ப்பதாக கூறி பேசி வந்துள்ளார். இதனால் அதிக நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து தீவிரமாக இதில் வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் பிரீமியம் உறுப்பினராக மாற வேண்டும் என்றால், அதிக பணம் செலுத்த வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை செய்த போது அதிக பணம் செலுத்தினால் பிரீமியம் உறுப்பினராக மாற முடியும் எனவும் கமிஷன் அதிகளவு கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் ப்ரீமியம் உறுப்பினராக கேட்கும் தொகையை செலுத்தி மாறினால் மட்டுமே அடுத்தடுத்து அதிகளவில் பணம் சம்பாதிக்க அந்நிறுவனம் அனுமதிக்கும் என்ற கட்டுப்பாட்டையும் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாய் பணம் செலுத்தி தொடர்ந்து ஹோட்டல்களுக்கு ரேட்டிங் கொடுத்து வந்து பணத்தை சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பணம் வர ஆரம்பித்ததால் அடுத்தடுத்த கட்டத்திற்கு அப்கிரேட் செய்வதற்கு தொடர்ந்து பணம் செலுத்துமாறு லிங்க் மூலமாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை நம்பி 3 லட்ச ரூபாய் வரை செயலி மூலமாக பணம் செலுத்தி தொடர்ந்து அவர்கள் கொடுக்கும் ஹோட்டல்களுக்கு ரேட்டிங் கொடுக்கும் பணியை ஆன்லைன் மூலமாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் 13 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தி அப்கிரேட் செய்து கொண்டால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் என மீண்டும் கூறி பணம் செலுத்துமாறு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பணம் செலுத்தி தொடர்ந்து பணி செய்ய முடியாது என குமார் நினைத்துள்ளார். இருப்பினும் போட்ட பணத்தை எடுப்பதற்கு கடன் வாங்கியாவது செலுத்தி மொத்த பணத்தையும் சம்பாதித்து விடலாம் என எண்ணத்திலேயே இருந்துள்ளார். அப்போது இவருடன் நட்பாக பழகி வந்த பெங்களூரைச் சேர்ந்த யாழினி என்பவர் 4 லட்ச ரூபாய் கடனாகத் தருவதாகவும் மீதி உள்ள பணத்தை வங்கி மூலம் கடன் வாங்கி செலுத்துமாறு கூறியுள்ளார்.
தன்னைப் போன்று பகுதி நேர வேலை பார்க்கும் பெண்ணும் லட்சக்கணக்கில் உதவி செய்வதாலும் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையிலும் வங்கியில் கடன் வாங்கி செயலியில் 13 லட்ச ரூபாய் செலுத்தியுள்ளார். அதன் பின்பும் அப்கிரேட் செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது பதில் அளிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதே நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்த்து நட்பாக பழகிய யாழினியை தொடர்பு கொண்டு பேசும் பொழுது ஹிந்தியில் பேசியதால் மேலும் சந்தேகம் அதிகமானது. அவர் கடனாக கொடுத்த 4 லட்சம் ரூபாய் பணத்தை நேரடியாக தன் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் அந்த நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தியதும் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின் தீவிரமாக விசாரணை செய்த போது தான் உண்மையாக கார்ப்பரேட் டிராவல் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் செயல்படும் சர்வதேச நிறுவனத்தை போல் போலியாக ஆன்லைனில் நிறுவனம் உருவாக்கி மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னை நம்ப வைப்பதற்காக whatsapp குரூப்பில் இணைத்து பலரும் அதிகம் சம்பாதிப்பது போல் பதிவை போட வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் பெண் ஒருவரை நட்பாக பழக வைத்து மோசடியில் இருந்து தப்பிக்காமல் தொடர்ந்து பணம் செலுத்த வைத்ததை அறிந்தும் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் தேதி இந்த லிங்கில் பணம் செலுத்த ஆரம்பித்த குமார் ஒரே வாரத்தில் 16 லட்சம் ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அனைத்து நபர்களும் டெலிகிராம், வாட்ஸ் அப் மூலமாக ஆன்லைனில் மட்டுமே பேசி மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து வடமாநில கும்பல் நூதன முறையில் தன்னிடம் மோசடி செய்ததை அறிந்த குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதேபோன்று இந்தியா முழுவதும் பலரும் மோசடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் அதிக ஃபாலோவர்கள் மற்றும் லைக்குகள் கொடுத்தால் பணம் என்ற முறையில் வடமாநில கும்பல் மோசடி செய்ததின் அடுத்த கட்டமாக, ரேட்டிங் அளித்தால் பணம் எனக் கூறி மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கட்டப்பஞ்சாயத்து செய்து பிரச்னையை முடிப்பதாகக்கூறி லட்சக்கணக்கில் பணமோசடி - இருவர் கைது