சென்னை: அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் முன் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஜெகதீசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்தவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேற வேண்டும் எனவும் கூறினர். பின்னர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்ட 4 பேரின் சாம்பலை (அஸ்தி) தபால் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீசன், "கவர்னர் பதவியால் யாருக்கும் பலன் இல்லை. தமிழ்நாடு கவர்னர் என்று சொன்னால் அந்த கவர்னரால் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் பலன் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், அந்த கவர்னர் பதவியை ஏன் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சிக்கு ஒரு கண்காணிப்பு தேவை. ஒரு மாநிலத்தில் நடக்கின்ற செய்திகளை எடுத்து சொல்வதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளராக ஆளுநர்கள் இருக்கின்றனர்" எனக் கூறினார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. பின்னர், இச்சட்டத்தை நிரந்தரமாக்கும் வகையில், சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது முறையான விளக்கம் இல்லை எனக் கூறி, மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
பின்னர் மீண்டும் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஆன்லைன் சூதாட்ட நிறுவன உரிமையாளர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். இந்நிலையில், மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், பல்வேறு விளக்கங்களை கேட்டு, திருத்தங்களை செய்து அனுப்பும்படி, மசோதா இரண்டாவது முறையாக தமிழ்நாடு அரசுக்கு அண்மையில் திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வரும் 20-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இக்கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியீடு!