கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (48). இவர் கடந்த 19ஆம் தேதி இரவு 11 மணி அளவில் கொடுங்கையூர் வாசுகி நகர் 7ஆவது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாசுகி கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு ஓடினார்.
இதனையடுத்து ராஜேஸ்வரி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் கொடுங்கையூர் காவலர்கள் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனின் புகைப்படத்தைக் கொண்டு அப்பகுதி முழுவதும் விசாரித்து, கண்டறிந்தனர். பின்னர் சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அந்தச் சிறுவன் பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது.
ஆன்லைன் வகுப்புகளுக்காக வாங்கிய செல்போனில் கலர் டிரேடிங் எனப்படும் விளையாட்டை பதிவிறக்கம் செய்து தனது தாயாரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி தொடர்ந்து பணம் வைத்து விளையாடி, கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.
மேலும் விளையாடுவதற்கு பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து அதை தனது தாயின் வங்கிக் கணக்கில் செலுத்தி விளையாடி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதையறிந்த அவரது தாய், இதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்ததால், வேறு வழியில்லாமல் கடந்த 19ஆம் தேதி ராஜேஸ்வரி கழுத்திலிருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்து அதை ஒரு கடையில் அடமானம் வைத்து தாயின் நகையை மீட்க எண்ணியுள்ளார். இந்த காரணத்திற்காக நகையை திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, தொடர்ந்து அந்த சிறுவனிடம் கொடுங்கையூர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.